Pages

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

விஸ்வகர்ம சமூகத்தவரின் தொழின் தொன்மை

ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர் போன்ற ஊர்களில் இரும்பு உருக்கி எடுக்கும் தொழில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளால் தெளிவாக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, செம்பு தங்கம் போன்றவையும் சிறிய அளவில் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரியின் பழம் பெயரான குருகூர் என்பது கூட உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம். முக்கூடற்பள்ளு என்ற 17ஆம் நூற்றாண்டு இலக்கியம் "சேர குலப் பத்தனார் தம் மாளிகைப் பூங்காட்டு வளமெல்லாம் களமர் உரை செய்வாரே" என்று குறிப்பிடுகிறது. சேர அரச குலத்தவர்க்கு நகை செய்து கொடுத்து வந்த பத்தர் (விஸ்வகர்மா இனத்தவர்)க்குரிய பூந்தோட்டத்துடன் (நந்தவனத்துடன்) கூடிய மாளிகை ஒன்று ஆழ்வார் திருநகரியில் இருந்ததாக இதற்கு உரை கூறப்படுவதுண்டு. ஆழ்வார் திருநகரி விஸ்வகர்ம சமூகத்தவரின் தலைநகராக இருந்து வந்ததாகவும், 20ஆம் நூற்றாண்டில் அவர்கள் பெருமளவில் ஏரலில் குடியேறிவிட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றன. இரும்பு உருக்குகின்ற தொழில் இப்போதும் கூடச் சிறிய அளவில் ஏரல் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஒழுக்கு அறல் அல்லது ஒழுக்கறை எனப்படும், ஆற்றுப்படுகையில் காணப்படும் கருநிற மணலை எடுத்து உருக்கி இரும்புத் தூள் தயார் செய்து பற்ற வைப்பதற்கு அதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மண் வெட்டிக் குழைச்சியைத் தகட்டில் பொருத்திப் பற்ற வைப்பதற்கு இத் தூளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு இரும்பு உருக்குகின்ற தொழில்நுட்பத்திற்கு மிகுந்த வெப்பம் தேவைப்படும். எனவே, வெப்பத்தை அதிகரிப்பதற்கும், சூடு நீடித்து நிற்கச் செய்வதற்கும் சீனிக்கற்களைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. உலை சூட்டினால் வெடித்து விடாமல் பாதுகாப்பதற்கு வசதியாகக் கொல்லர் உலைகளின் உட்பகுதியிலும் சீனிக்கல் தூள் பொடித்துப் பூசப்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், வெடிகுண்டு பயன்படுத்தப்படுகின்ற பீரங்கி போன்ற ஆயுதங்களின் குழல் பகுதிகள் சூட்டினையும் அதிர்வினையும் தாங்கிக் கொள்வதற்கு வசதியாகச் சிப்பம் செய்யும் பொருளாகச் சீனிக்கல் தூள் பயன்பட்டிருக்கலாம். சீனிக்கல்லுக்குக் கடினத்தன்மை அதிகம் உண்டு. மோஹர் என்பவரால் நிர்ணயிக்கப்பட்ட கடினத்தன்மை அளவுக் குறியீட்டின்படி (Mohr's Scale of Hardness) வைரம் 10; மரகதம் 9; மாணிக்கம் 8; சீனிக்கல் (Quartzite) 7 என்ற மதிப்பில் அளவிடப்பட்டுள்ளன.
திருவைகுண்டம் வட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் சற்றேறக்குறைய 140 ஏக்கர் பரப்பளவுடைய பறம்பு இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு அண்மையில் நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களையும் இப் பறம்பினையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகளான திரு. எஸ். பத்ரிநாராயணன் (மேனாள் இயக்குநர், இந்திய மண்ணியல் பரப்பாய்வுத் துறை) மற்றும் திரு. சசிசேகரன் (விஞ்ஞானி, தேசிய ஆழ்கடல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், சென்னை) ஆகியோருடனான கலந்துரையாடலில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் என்னால் சில கருதுகோள்களை முன்வைக்க முடியும். இப் பகுதியில் பாஷாணத்துடன் (Arsenic) கலந்த நிலையில் பலவித உலோகப் படிவுகள் காணப்படுகின்றன. இவற்றை மூலக் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வாழ்ந்த மக்கள் அறிந்திருந்தனர். இத் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் அக்காலத் தச்சர், கொல்லர் சமூகத்தவராகவே இருக்க முடியும்2. தூத்துக்குடி மாவட்டத்தில் கொல்லன்பறம்பு, தட்டார்பாறை போன்ற பெயர்களில் வழங்கப்படும் இடங்களிலெல்லாம் மூலக் கனிமத்திலிருந்து உலோகத் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணி முற்காலத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். ஓட்டப்பிடாரத்துக்கு அருகிலுள்ள இராஜாவின் கோவில் என்ற பெயர் கொண்ட சிற்றூரில் உள்ள பழங்காலச் சிவன் கோயிலில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகளில் 'திவட்டாப்பாறை' என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது. திவட்டா என்ற சொல் த்வஷ்டா என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபாகும். தட்டார் (பொற்கொல்லர்) என்பதுதான் இதன் பொருள். இது தற்போதைய தட்டார்பாறை ஊரையே குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. முற்காலத்தில் இவ்வூரில் உள்ள பாறைகளிலிருந்து பொன் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது திண்ணம்.
கி.பி. 1660-70ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மதராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆவணங்கள் சிலவற்றில் ஒரு புதிரான குறிப்பு இடம்பெற்றுள்ளது. (இவ்வாவணங்கள் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணக் காப்பகத் துறையினரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.) ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் கப்பல்களில் Brahmanyee Cabin எனப்படும் பணிக்கூடம் இருந்ததாகத் தெரிய வருகிறது. இது விஸ்வ பிராம்மணர் எனப்பட்ட தச்சர், கொல்லர் சமூகத்தவரின் அறையாகவே இருக்க வேண்டும். இரு விதப் பணிகளில் வல்லமை பெற்ற விஸ்வ பிராம்மணர்கள் அக் கப்பல்களில் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என நாம் ஊகிக்கலாம். முதலாவதாக, கப்பலில் பழுது ஏற்பட்டால் பழுது பார்ப்பதற்குரிய தச்சுப் பணித் தொழில்நுட்பம் அறிந்தோர். இரண்டாவதாக, கப்பல்களில் உள்ள பீரங்கிகளுக்கு வெடி மருந்து தயாரித்துப் பாதுகாத்து வைக்கின்ற தொழில்நுட்பம் அறிந்தோர். அக் காலத்தில் பெரும்பாலான ஐரோப்பியக் கிழகிந்தியக் கும்பினிகளின் கப்பல்களில் ஈயப் பாளங்கள் (Lead Ingots) கொண்டு வரப்பட்டுள்ளன. ஈயம் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குப் பயன்படும் என்பதோடு, குறைந்த அளவு சூட்டிலேயே உருகு நிலையை அடைந்து விடும் என்பதால், கப்பல்களில் தீ விபத்து ஏற்படாத அளவு பாதுகாப்புடன் ஈயத்தை உருக்கிப் பயன்படுத்திட இயலும். இவ்வாறு கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் குறித்த தொழில்நுட்பமாகட்டும், வெடிமருந்து தயாரிக்கின்ற தொழில்நுட்பமாகட்டும், தொடக்க காலத்தில் ஆங்கிலேயக் .பி. 1639ஆம் ஆண்டு சென்னப்ப நாயக்கன் பட்டினமாகிய சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கட்டுமானப் பணி தொடங்கிற்று. அப்போது, வெடிமருந்துக் கிடங்குகள் உருவாக்குவதற்கும், வெடிமருந்து தயாரிப்பதற்கும் நாக பட்டன் என்ற விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்த தமிழரே ஆங்கிலேயருக்கு உதவி புரிந்துள்ளார்.5 தமிழர்கள் வாழ்ந்த Black Town பகுதியில் (20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப் பகுதியின் பெயர் ஜார்ஜ் டவுன் என்று மாற்றப்பட்டது) விஸ்வகர்ம சமூகத்தவருக்குரிய காளிகாம்பாள் கோயில் கட்டுவிக்கப்பட்டது. இக் கோயிலில் கி.பி. 1677ஆம் ஆண்டில் மராட்டிய வீரர் சிவாஜி வழிபட்டுச் சென்றுள்ளார் என்று சென்னை பற்றி ஆங்கிலேயர் எழுதி வைத்துள்ள பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியார் 17ஆம் நூற்றாண்டில் உள்நாட்டு விஸ்வ பிராம்மணர்களைச் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தமையால் தமக்கு உதவி புரிந்த விஸ்வ பிராம்மணர் சமூகத்தவர் சிலருக்குப் பெருமளவில் சலுகைகள் வழங்கி வந்தனர் கிழக்கிந்தியக் கும்பினி நம் நாட்டு விஸ்வகர்ம சமூகத்தவரையே சார்ந்திருந்தது என்பது வெளிப்படையான ஓர் உண்மையாகும்.       நன்றி திரு ....எஸ்.இராமச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக